தோட்ட அதிகாரிகளை பாதுகாக்க அட்டனில் போராட்டம்.

by Deva
172 views

பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துரைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் அட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03.03.2021) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட துரைமார் சங்கத்தினாலேயே குறித்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொழிலாளர் அராஜகம் ஒழிக, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக, தோட்டங்களில் அரசியல் மயமாக்கலை நிறுத்து, முகாமைத்துவத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக்கின்றோம் என்றெல்லாம் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர். கைகளில் கறுப்பு பட்டிகளையும் அணித்திருந்தனர்.

” பெருந்தோட்டப்பகுதிகளில் தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் ஒல்டன் தோட்டத்தில் துரையின் வீடு தேடி சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவே, தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது, உறுதிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டு எமக்கு பாதுகாப்பு நிமித்தம் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும்.

நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு தோட்ட அதிகாரிகளும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

எனவே, எமக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டிக்கின்றோம். நீதி கிடைக்க வேண்டும். இப்பிரச்சினையை சர்வதேசம் வரை கொண்டு செல்வோம்.” – என்று மேற்படி சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

Please follow and like us:

Related Posts