வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்தோடு உயர்ஸ்தானிகர் நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
வட, கிழக்கிற்கான விஜயத்தின் போது நேற்று முன்தினம் சிவராத்திரி தினத்தன்று உயர்ஸ்தானிகர் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்து கொண்டதோடு, இந்திய அரசாங்கத்தினால் 326 மில்லியன் ரூபா செலவில் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணிகளையும் பார்வையிட்டார்.
அத்தோடு இந்தியாவின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியில் மன்னார் புனித மடு மாதா ஆலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீட்டு அலகுகளுக்கான அடிக்கல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து உயர்ஸ்தானிகரால் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாகாணத்தின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை உயர்ஸ்தானிகர் வியாழனன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது கல்வி, ஆளுமை விருத்தி, சுகாதாரம், விவசாயம், நீர் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகவும் ஆழமான ஈடுபாடு குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய கொன்சூலர் ஜெனரல் எஸ்.பாலச்சந்திரனுடனான சந்திப்பிலும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டார்.