விமலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

by Mano
362 views

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டுவரப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது தொடர்பில் எதிரணி எம்.பிக்கள் சிலர் தீவிரமாக ஆராய்ந்துவருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பில் கலந்துரையாடிவருவதுடன், பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

அமைச்சர் விமல் வீரசன்சவுக்கு எதிராக அரசுக்குள்ளேயே எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன. குறிப்பாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பஸில் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான 43 எம்.பிக்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்து விமலுக்கு எதிரான முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். விமலால் ஆற்றப்பட்டுள்ள சில உரைகளையும் காணொளி வடிவில் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்புலத்தில் நம்பிக்கையில்லாத பிரேரணையொன்றை முன்வைத்தால் அது அரசுக்கு சவாலாக அமையும் எனவும், மொட்டு கட்சி உறுப்பினர்கள்கூட ஆதரவு வழங்ககக்கூடும் எனவும் எதிரணி உறுப்பினர்கள் சிலர் கருதுகின்றனர். அதேபோல் அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைக்கூட ஆட்டம் காண வைக்கமுடியும் எனவும் கருதுகின்றனர்.

எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தால் பிளவுபட்டிருக்கும் அரச கூட்டணி  மீண்டும் ஐக்கியமாகக் கூடும் என்ற கோணத்திலும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடிய பின்னரே இது விடயம் தொடர்பில் இறுதி முடிவொன்று எடுக்கப்படக்கூடும்.

Please follow and like us:

Related Posts