தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவில் ரெலோ அமைப்பின் தலைவரும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திலேயே இத் தெரிவு நடைபெற்றது.
ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவி வகித்த சிறிகாந்தா புதிய கட்சியை அமைத்தமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1983ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பில் கோ.கருணாகரம் இணைந்து கொண்டார்.1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதலில் படுகாயமடைந்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து தமிழீழ விடுதலை இயக்கம் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.
1988ஆம் ஆண்டு மட்டக்களப்பு அம்பாரை பிராந்திய அமைப்பாளராக ஜனா நியமிக்கப்பட்டார்.
1989ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1994ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக மக்களிற்குப் பணியாற்றினார்.
கோ. கருணாகரம் தனது 25 வயதில் பாராணளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பபட்டு மிகக் குறைந்த வயதில் பாராளுமன்றம் சென்றவர் என்ற பெருமைக்குரியவர்.
1989ஆம் ஆண்டுமுதல் ரெலோவின் செயலாளர் நாயகமாக செயற்பட்டார். நாட்டுச்சூழல் காரணமாக 1995ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்த இவர் 2012ஆம் ஆண்டு நாடு திரும்பினார்.
நாடு திரும்பியதையடுத்து 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மீளவும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 26வருடங்களுக்குப் பின்னரும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
—