ஜெனீவா தீர்மானம் – விவாதம் நடத்தும் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்

by Mano
70 views

இலங்கையின் பொறுப்புகூறல் மற்றும் கணக்கு ஒப்புவிப்பு குறித்து ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மீண்டும் அறிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மானம் மீது விவாதத்தை நடத்துவதற்கான கோரிக்கை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டதால் பாரிய அமளிதுமளி ஏற்பட்டதோடு விவாதத்தை நடத்த சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் பகிரங்கப்படுத்தினார்.

முற்றுமுழுவதுமாக பக்கச்சார்பான தீர்மானமாகவே இதனை பார்ப்பதாகவும், தீர்மானத்தை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“ தமிழீழ விடுதலைப் புலிகள் எமது நாட்டு ஜனாதிபதியை கொலை செய்தது. இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தது. உள்நாட்டில் தமிழ் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது.

இப்படியான கொடூர அமைப்பினை எமது படையினர் அழித்தனர். இன்று நாடு பிளவுபடாமல் ஜனநாயக வழியில் உள்ளது.

இதனை கவனத்திற்கொள்ளாமல் வெளிநாடுகளிலுள்ள சிறியளவிலான குழுவினர் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கும்படி அழுத்தம் கொடுக்கின்றன.

எமது அரசாங்கம் ஐ.நாவுடன் தொடர்ந்தும் பணியாற்றக்கூடிய நிலைப்பாட்டில்தான் இருக்கின்றோம்.

இன்று மாகாண சபை முறை பற்றி பலரும் பேசுகின்றனர். யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர், தோல்வி ஏற்படும் என நினைத்தும் வடக்கில் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தியது.

அவர்கள் நிர்வகிக்க முடியாததை அடுத்து நிதியை மீளச்செலுத்தியதுமட்டுமன்றி, அரசாங்கம் மீதும் குற்றஞ்சாட்டினார்கள்.

கடந்த அரசாங்கத்தின்காலத்தில் மாகாண சபை தேர்தல் முறையை மாற்றவும் தமிழ்ப் பிரதிநிதிகள் வாக்களித்தார்கள்.

இது பாரதூரமானது, தேர்தல் நடத்தப்படாமலிருக்கலாம் என அன்று எச்சரித்தோம். இறுதியில் தேர்தல் முறை திருத்தத்தை கொண்டுவந்தார்கள்.

அரச தலைவர்-பிரதமரிடையே ஒத்துழைப்பு அற்ற அரசாங்கமாக மாறியது. இதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு தெரிவதில்லை.

எனினும் எமது விளக்கத்தில் அவற்றை கூறியிருக்கின்றோம். கடந்த அரசாங்கமே தேர்தலை ஒத்திவைத்தது. ஏற்கனவே ஜெனீவாவில் இருந்த இணை அனுசரணை தீர்மானம் எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரண் என்பதை கண்டோம்.

இவற்றை திருத்தியமைக்கும் படியான மக்கள் ஆணை கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்தது.

அதற்கமைய ஸ்ரீலங்காவை விடுதலையாக்கி, அநீதி ஏற்பட்டிருந்தால் அவர்கள் பற்றி விசாரணை செய்ய நீதியரசர் தலைமையிலான ஆணைக்குழுவை அமைப்பதாக தெரிவித்திருந்தோம்.

கோவிட் ஒழிப்பினை மிக திறமையாக எமது அரசாங்கம் செய்தது. அதனையும் தெரியாமல்தான் ஜெனீவா ஆணையாளர் தகவல்கள் தெரியாமல் குற்றஞ்சாட்டியிருந்தார்” எனத் தெரிவித்தார்.

இதேவைளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தினேஷ் குணவர்தன, சர்வதேச பிரதிநிதிகளுடன் அரசாங்கத்தை பங்கப்படுத்த சிலர் உள்நாட்டிலிருந்து இரகசியமாக பேசி வருவமாக குற்றஞ்சாட்டினார்.

அதேபோல போர்க்குற்றம் மற்றும் காணாமல் போனோர் பற்றி விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அதுசார்ந்த விசாரணைகளை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

“இறுதிப்போரில் படையினரால் கொலை செய்யப்பட்டிருந்தால் அதுபற்றி ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும். காணாமல் போயிருந்தால்,

அவர்கள் பிரித்தானியாவில் இல்லாவிட்டால், ஏனென்றால் பிரித்தானியா இன்னும் அங்கு குடியேறியவர்கள் பற்றிய தகவல்களை எமக்குத்தரவில்லை. அதுபற்றியும் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும்.

ஜெனீவா தீர்மானம் முழுமையாக சட்டவிரோதமானது. இந்த தீர்மானத்தை இன்று சபைப்படுத்துகின்றேன்.

இந்த தீர்மானத்தை மீண்டும் நிராகரிக்கின்றோம். ஒருதலைப்பட்சமாக உள்ள இந்த தீர்மானமானது, உள்ளக விடயங்களில் ஊடுருவும் வகையில் அமைந்துள்ளது.

இறுதிப்போரில் உயிரிழந்தவர்கள் பற்றிய விசாரணை மற்றும் இலங்கையின் பாரிய வெற்றியைப் பெற்ற அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிமுறை பற்றிய விமர்சனமாக இந்த தீர்மானம் காணப்படுகின்றது.

இந்த தீர்மானத்தினால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என எதிரணி கூறுகின்றது. எனினும் அவ்வாறு நடக்காது.

சிலர் இரகசிய பேச்சுக்களை நடத்துவதாக அறிகின்றோம். ஐ.நாவுடன் எமது நட்புப் பயணம் தொடரும்” என்று அவர் கூறினார்.

அமைச்சர் தினேஷின் இந்த விளக்கத்தை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிட்டார்.

“இந்த தீர்மானம் 17 பக்கங்களைக் கொண்டது. அதில் இரண்டு பக்கங்களில் போர் பற்றி உள்ளதோடு, ஏனைய பக்கங்கள் அனைத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நடக்கும் மனித குலத்திற்கெதிராக, ஜனநாயக விரோத செயற்பாடுகளை விமர்சிப்பதாக உள்ளன.

ஜெனீவா ஆணைக்குழுவினை எமக்கு யார் அறிமுகப்படுத்தியது? 1989ஆம் ஆண்டில் தற்போதைய பிரதமரான மஹிந்த ராஜபக்சவே காணாமல் போனோர் பற்றிய தகவல்களை சேகரித்து ஜெனீவாவுக்கு சென்றவர்.

உள்நாட்டுப் பிரச்சினையை அவரே சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றவர். ஐ.நா பிரதிநிதியை கடந்த ஆட்சியாளரே நியமித்தார். நாங்கள் அல்ல” என தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் இந்தக் கருத்து சபையில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டது. 

ஐ.நா மனித உரிமைப் பேரவை மிகவும் பொறுப்பற்று செயற்பட்டதாக வெளிவிவகார அமைசச்ர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட ஆளுந்தரப்பினர் பாரிய கூச்சலுடன் சபையில் கருத்து வெளியிட்டதோடு, அதற்கெதிராக எதிர்கட்சிகளும் கருத்து வெளியிட்டன.

இந்த நிலையில் ஜெனீவா தீர்மானம் மீது விவாதத்தை எதிர்கட்சியினர் கோரிய போதிலும் இன்றைய தினம் விவாதத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்பதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன திட்டவட்டமாக அறிவித்தார்.

Please follow and like us:

Related Posts