நான் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் அடம்பிடிக்கும் மாவை

நான் தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் அடம்பிடிக்கும் மாவை.

by Deva
364 views

முதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும்.

அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(30) இரவு தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி செயற்பாட்டார்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

இலங்கை நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடங்கிய ஒரு அரசியலமைப்பு எற்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசின் பிரேரணைகளில் இனப்பிரச்சினைத் தீர்வினை முன்வைப்பார்களாக இருந்தால்,

அரசாங்கத்திற்கு அப்படியொரு எண்ணம் இருந்தால் மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறாக அரசாங்கத்துடன்

ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என எமது அங்கத்தவர்களாலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

அதற்கான ஒரு சூழ்நிலை எழ வேண்டும். அரசாங்கம் அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அரசாங்கம் அதற்குத் தகுந்ததாக இருந்து அரசியலமைப்பை உருவாக்குவதற்கு

ஆயத்தமாக இருந்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்களும் பேச்சுவார்த்தை நடாத்துவோம். அதற்கான பிரேரணைகளும் ஏற்கனவே எம்மால் வழங்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை நாட்டினுடைய அதி முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை சம்மந்தாக ஐக்கிய நாடுகள் சபையிலும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அந்த வகையிலும் எமக்கு ஒரு புதிய உத்வேகம் இருக்கின்றது. எமது நாட்டின் இனப்பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியிலும் அடித்தளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் தயார் என்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கும் தயாராக இருக்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் முன்னரை விட பல படிகளில் முன்னேற்றம் உள்ளதாக இருக்கின்றது.

பல அமைப்புகள் பொதுமக்கள் மத்தியிலே இத்தனை காலமும் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை,

போர்க் குற்றங்களுக்குத் தீர்வோ, நீதியோ கிடைக்கவில்லை என்ற கருத்தில் இந்த மனித உரிமைப் பேரவையில் தீர்வு வரப் போகின்றது என்ற எதிர்பார்ப்போடு பல பிரேரணைகளை முன்வைத்திருந்தார்கள்.

ஆனால் அவற்றில் எல்லா விடயங்களையும் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றக் கூடிய விதிமுறகைள் இல்லாமல் இருக்கலாம்.

அது ஒரு பிரச்சினையான விடயம் தான். ஆனால், அப்படியான ஒரு தீர்மானம் மிகப் பெரிய அளவில் சர்வதேச குற்றவியல் விசாரணை போன்ற விடயங்களில் எடுக்கப்போனால் அந்தப் பிரேரணை அங்கு கொண்டு வர முடியுமா?

அவ்வாறு நிறைவேற்றுவதற்கு நாடுகள் இணக்கம் கொண்டிருக்கின்றனவா? 47 நாடுகளில் எத்தனை நாடுகள் அவ்வாறான பிரேணையை எடுக்கும்?

என்ற விடயங்கள் எல்லாம் எழுந்தால் அதற்கான பல தடைகள் இருக்கின்றன.

அது அவ்வாறு இலகுவான விடயம் அல்ல. மனித உரிமைப் பேரவையில் அவ்வாறு எடுப்பதாகவும் இல்லை.

ஆனால் அது பாதுகாப்புச் சபைக்குப் போக வேண்டும். ஆனால், அந்த விடயங்களையெல்லாம் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்

மிகத் தெளிவாகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்ற கருத்துப்பட அறிக்கையிட்டுள்ளார்.

அதைப் பிரதிபலிக்க கூடிய பல விதிமுறைகளும் இந்தப் பேரவையின் பிரேரணையிலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பொறுப்புக் கூறல் விடயத்தில் மூன்று நான்கு பந்திகளில் பொறுப்புக் கூறல் எவ்வாறு நிலை நாட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் போர்க்குற்றம் இளைத்தவர்களுக்கு எதிரான விடயங்களைத் திரட்டக் கூடிய வகையில் மனித உரிமைகள் ஆணையாளர் நிறைவேற்றக் கூடியதாக

அதனை எங்கு கொண்டு வர வேண்டுமோ அங்கு கொண்டு வருவதற்கான ஆதாரங்களைகத் திரட்டக் கூடிய விதத்தில் பன்னிரண்டு ஆணையாளர்களை நியமிப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அதை விட எங்களுக்கு முன்னுதாரணமாக மனித உரிமைப் பேரவையிலும் நிறைவேற்றப்பட முடியாத தீர்மானங்களை அவை பாதுகாப்பச் சபைக்குப் போகாமலும்

அல்லது பொதுச் சபையிலே நிறைவேற்றப்படுவதற்குப் பொருத்தமான விடயங்கள் இருப்பதன் அடிப்படையில் சிரியாவில் எவ்வாறு குற்றவியல் விசாரணையை

நடத்துவதற்கு ஐநாவின் மூலம் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றதோ அதேபோல் மியன்மாரில் ஒரு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு எப்படி மனித உரிமைப் பேரவைக்கும்

பாதுகாப்புச் சபைக்கும் அப்பால் அதற்கான சாட்சியங்களையும் திரட்டுகின்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றதோ அதேபோன்றதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்படாது விட்டாலும், இந்த அரசு, இராணுவ அதிகாரிகள் இளைத்த குற்றங்கள் என்ற விடயங்களில் இந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கின்ற நாடுகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும்,

அங்கே வழிகாட்டல்கள் இருக்கின்றது.தற்போது இந்த அரசாங்கம் எதற்காக தங்கள் இராணுவத்திற்குத் தண்டனைகள் விதிக்கப்படாமல் பாதுகாப்பதற்கென்று

ஒரு அரசியற் சட்டத்தைக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்க வேண்டும்? ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி

ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள் என்பவற்றை ஒட்டித்தான் இந்த அரசாங்கம் மேற்சொன்ன சட்ட விடயத்தைப் பற்றிப் பேசுகின்றது என்று எண்ணுகின்றோம். இவ்வாறெல்லாம் அந்தத் தீர்மானம் மிக வலுவானதாக இருக்கின்றது.

ஆனால் மக்களுடைய எண்ணங்கள் எதிர்பார்ப்புகள். இந்த அரசாங்கத்தில் குற்றமிளைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை,

பொறுப்புக் கூறல் நிறைவேற்றப்படவில்லை, இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்ற ஆவலில் இந்த மனித உரிமைப் பேரவைத் தீர்மானம்

தங்களுக்குச் சாதகமாக வந்துவிட வேண்டும் என்று அவர்கள் அதிகமாகப் பல எண்ணப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள்.

அவை அப்படியே மிகத் தெளிவாக இந்த மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் இந்த ஏக்கம்,

ஏமாற்றம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதனை நாங்கள் தெளிவாகப் பார்த்தால் மன்னிப்புச் சபை, ஜயன் ஜயதிலக போன்ற நடுநிலைவாதிகள்,

சர்வதேசத்தின் பல நாடுகள் போன்றவை இந்த மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் முன்னரை விட எவ்வளவு கடுமையானதாக இருக்கின்றது.

அரசாங்கத்திற்குப் பல நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியதென்று வர்ணித்திருக்கின்றார்கள்.

எனவே இதை விட நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. குற்றதமிளைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது மட்டுமல்ல.

முதன் முறையாக இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் அங்கே எடுக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இந்த நாட்டில் தமிழர்களுக்கான தமிழ்த் தேசத்தின் தமிழ் இன விடுதலைக்கான அரசியற் தீர்வு நிச்சயம் ஏற்பட வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கடசிகள் அனைத்தும் சர்வதேசத்தின் ஏனைய சக்திகள் அனைத்தும் ஒரு கட்டமைப்பாகச் செயற்பட வேண்டும்.

நாங்களும் தேர்தலைத் தாண்டி இந்த இனப்பிரச்சினை தீர்க்கக் கூடியததாக ஒரு சிறந்த கட்மைப்பை எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாக உருவாக்க வேண்டும்.

நாங்கள் ஏற்கனவே பல தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றோம். சர்வதேச ரிதியிலும் அவ்வாறான கட்டமைப்பு உருவாக வேண்டும்.

நாங்கள் வெறுமனே தேர்தலை மையமாகக் கொண்ட ஒரு கூட்டு அல்ல எங்களுக்கு ஒரு சிறந்த பலம் வாய்ந்த கட்டமைப்பு புலம்பெயர் ரீதியிலும்,

இங்கும் உருவாக வேண்டும். அது பல நாடுகளின் நிபுனத்துவம் வாய்ந்தவர்களால் இன்று உச்சரிக்கப்பட்டிருக்கின்றது.

நவநீதம்பிள்ளை அவர்களும் சர்வதேச ரீதியில் எமது இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்று அறிவத்திருக்கின்றார். அது எமக்கு மிகவும் உற்சாகமாக இருக்கின்றது.

நாம் எதிர்பார்த்த முழுவதுதும் அப்படியே இங்கே கிடைக்காது விட்டாலும் இந்த மனித உரிமைப் பேரவையின் முன்னேற்றங்கள் தொடர்பில் நாங்கள்

ஆர்வம் கொண்டு பொறுத்திருந்து அந்த நடைமுறைகளுக்கு முழுமையாக நாங்களும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட வேண்டும்.

மகாகாணசபைத் தேர்தல் தொடர்பிலும் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இந்தியா போன்ற நாடுகளும் அது தொடர்பில் பேசியிருக்கின்றன. இந்தியா நடுநிலைமை வகித்தாலும் மிக ஆக்கபூர்வமான பணிகளை அந்தத் தீர்மானத்தின் ஊடாக எடுத்திருக்கின்றது. அந்தப் பொறுப்பையும் நாங்கள் உணருகின்றோம்.

அவர்கள் மிகவும் தந்திரோபாயமாக அந்தத் தீர்மானத்தில் நடுநிலை வகித்திருக்கின்றார்கள்

. ஆனால் அவர்கள் சிறந்த முறையில் எமது மக்களின் விடுதலைக்காக சர்வதேசத்தில் வேலை செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

மாகாணசபை விரைவில் நடைபெற வேண்டும் என்று பல நாடுகளும் வற்புறுத்தியிருக்கின்றன.

அவ்வாறு நடைபெறாது விட்டாலும் அந்தப் பல நாடுகளும் இந்த அரசாங்கத்திற்கு எதிராகத்தான் செயற்பட வேண்டும்.

மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம்.

ஆளுங்கட்சிகள் வடக்கு கிழக்கைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் நாங்களும் எவ்வளவு தூரத்திற்கு

மிகப் பெரிய அளிவில் ஒன்றுபட்டு செயற்பட முடியும், தேர்தல் வெற்றியைப் பெற முடியும் என்பது பற்றி ஆராய்வோம் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

Related Posts