பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி, 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி .

by Mani
51 views

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அணிக்கு அளித்தனர். குறிப்பாக மயங்க் அகர்வால் பவுண்டரி, சிக்ஸராக தூக்கி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என இருவருமே அரை சதம் அடித்தனர். தொடக்க ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அளித்தது. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த இந்த இணையை 13வது ஓவரில் பிரித்தார் லுக்மன் மெரிவாலா. மயங்க் அகர்வால் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவானிடம் கேட்சாகி வெளியேறினார். இதே போல கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இவர் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களையும் தூக்கினார். இதன் பின்னர் வந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோ அதிகளவில் பங்களிப்பை அளிக்காத நிலையில் 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புடன் 195 ரன்களை எடுத்து 196 ரன்களை வெற்றி இலக்கான நிர்ணயித்தது பஞ்சாப் அணி.

இதனையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக துவக்க ஆட்டக்காரர்களாக வந்த பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பிரித்வி ஷா 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தார். இருப்பினும் தன்னந்தனி ஆளாக அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார் ஷிகர் தவான். அவர் 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் 15வது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதிக் கட்டத்தில் களத்தில் நின்ற மார்கஸ் ஸ்டோனிஸ் நம்பிக்கை அளிக்கும் விதமாக அதிரடியாக ஆடியதால் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணி நெருங்கியது. அவருக்கு லலித் யாதவ் கம்பெனி கொடுத்தார். இருவரின் அதிரடியால் இறுதிக் கட்ட நெருக்கடி அகன்றது. 12 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் லலித் யாதவ் நோ பாலில் பவுண்டரி அடித்துவிட்டு அடுத்த பந்திலேயே ஒரு ரன் எடுத்தார். பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார் . இதன் மூலம் 10 பந்துகள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Please follow and like us:

Related Posts