சபா மண்டபத்தில் ஏற்றியிருக்க வேண்டிய தீபம்? தமிழரசுக் கட்சியின் நாடகம்–

by Mani
261 views

—இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உறுப்பினர்கள் வணக்க நிகழ்வுகளையோ அல்லது வேறு நிகழ்வுகளையோ நடத்துவதாக இருந்தால், பாராளுமன்றத்தில் முன்பக்கமாக இருக்கும் சபா மண்டபத்திலேயே நடத்துவது வழமை.

அல்லது கூட்டங்கள் நடத்துவதெற்கெனத் தனியான சிறிய, பெரிய குழு அறைகள் உண்டு. அங்கும் தீபம் ஏற்றி வணக்க நிகழ்வை நடத்தியிருக்கலாம்.

ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் தீபம் ஏற்றி முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வை நடத்தியுள்ளனர். இது முற்று முழுதான ஏமாற்றுச் செயற்பாடு.

சபா மண்டபத்தில் வணக்க நிகழ்வை நடத்த பாராளுமன்றப் பொலிஸார் தடை விதிப்பார்கள். அல்லது ஏன் தேவையற்ற சிரமம், சிக்கல் என்று இவர்கள் நினைத்திருக்கலாம்.

அத்துடன் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு வந்துவிடும் என்ற அச்சமும் இருந்திருக்கலாம்.

குறைந்த பட்சம் சபைக்குள் சென்று அமர்ந்திருந்தபோதுகூட முள்ளிவாய்கால் நினைவு என்று எழுதப்பட்ட சுலோகங்களையாவது கைகளில் ஏந்திக் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். அதைக்கூடச் செய்யாமல் கறுப்பு உடையோடு மாத்திரம் சென்றிருக்கிறார்கள்.

ஆக இலங்கை அரசாங்கத்துக்கும் நோகாமல், தமிழ் மக்களும் தங்களைத் தவறாக நினைத்துவிடாமல், சாதூரியமான முறையில் தமது அலுவலகத்தில் தீபத்தை ஏற்றிவிட்டு அந்தப் படங்களை ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் என்ன நடத்தினாலும் அது பற்றி அரசாங்கமோ, பாராளுமன்றப் பொலிஸாரோ விசாரணை நடத்தமாட்டார்கள். அல்லது அது பற்றி எந்த உறுப்பினர்களும் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் அது அந்தக் கட்சிக்குரிய சிறப்புரிமை.

ஆகவே தமது அலுவலகத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தியது சாதனை அல்ல.

மக்களுக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தெரியாதென நினைத்து இவர்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

சரி, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று ஏன் இவர்கள் பாராளுமன்றத்துக்குப் போனார்கள்? சிவாஜிலிங்கம் நந்திக் கடலுக்குச் சென்று தீபம் ஏற்றியது போன்று அங்கு சென்றிருக்கலாமே?

முள்ளிவாய்கால் நினைவு முற்றத்துக்குக் கொஞ்சம் அருகாகச் சென்று வேலன் சுவாமிகள் தீபம் ஏற்றியிருந்தாரே. அதுபோன்று ஏன் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்குச் செல்ல முடியாமல்போனது?

பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் தமது ஊர்களில் உள்ள வீடுகளில் அல்லது தத்தமது பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களில் இருந்தாவது தீபம் ஏற்றியிருக்கலாமல்லவா?

சரி, அப்படி பாராளுமன்றத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென்றிருந்தால், சபா மண்டபத்தில் அல்லவா அந்த நிகழ்வை நடத்தியிருக்க வேண்டும்? அப்படி நடத்தியிருந்தால் மாத்திரமே அது செய்தி.

2006 ஆம் ஆண்டு மாவீர் நாள் அன்று செல்வராஜா கஜேந்திரன், சபா மண்டப வாசலில் உள்ள படிக்கட்டுகளில் தீபம் ஏற்றினார். தவிர்க்க முடியாத சூழலில் சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் அங்கு ஓடிச் சென்று ஏதோ தாங்களும் சேர்ந்து தீபம் ஏற்றுவதுபோல அன்று படம் காட்டடியிருந்தார்கள்.

–ஆனால் இன்று கஜேந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் கூட அந்தச் செயற்பாடுகளை ஏன் மறந்தார்கள்?– அந்தத் துணிவு ஏன் இன்று இல்லாமல் போனது?

—2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் சட்டங்களுக்குப் பணிந்து அச்சாப்பிள்ளை அரசியல் நடத்துகிறார்கள் என்று எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் ஏலவே நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்-

Please follow and like us:

Related Posts