கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்துவருகின்ற எக்ஸ்பிறஸ் பேர்ல் வெளிநாட்டுக் கப்பலில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவிக்கின்றது.
“தமிழ் தேசம்” செய்திப் பிரிவுக்கு இன்று காலை கருத்து வெளியிட்ட கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா, கொழும்பு துறைமுகக் கடற்பரப்பில் எண்ணெய் கலந்துள்ளதால் பாரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.
கொழும்பு துறைமுகக் கடற்பரப்புக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி தீப்பற்றிக்கொண்ட சிங்கப்பூர் நாட்டுக் கொடியின் கீழ் பதிவாகியுள்ள எக்ஸ்பிறஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ எரிந்து வருகின்றது.
ஏற்கனவே கடந்த 22ஆம் திகதி கப்பலில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருந்த போதிலும் நேற்றைய தினம் அதிகாலை மீண்டும் அந்தக் கப்பலில் இரசாயன கொள்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டதில் தீ ஏற்பட்டது.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இலங்கைக் கடற்படை, விமானப்படை என பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றைய தினத்திலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலைமை குறித்து ஸ்ரீலங்கா கடற்படையின் பேச்சாளரான கப்டன் இந்திக டி சில்வாவிடம் எமது செய்திப் பிரிவு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர், குறித்த கப்பலுக்கு அருகில் செல்வதற்கும் அச்சுறுத்தலாகவே இருப்பதால் தீயை இன்றைய தினத்திற்குள் கட்டுப்படுத்துவது மிகவும் சவால்மிக்கதாகும் எனத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்தியாவிலிருந்து வருகைதந்துள்ள 04 படகுகள், இன்றைய தினம் மதியம் கப்பலுக்கு அருகே சென்று தீயைக் கட்டுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
மறுபக்கத்தில் கடல் நீரில் எண்ணெய் கலந்திருப்பதை நினைவுப்படுத்திய கடற்படைப் பேச்சாளர், இது மிகவும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை நேற்றுவரை எக்ஸ்பிறஸ் பேர்ல் கப்பலில் இருந்து 08 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்திருக்கின்றன.